நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணையும் புதிய திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு கடைசியாக நடித்த ‘தக் லைப்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்திருந்த அந்த படம் கலவையான விமர்சனங்களையும், வணிக ரீதியிலான தோல்வியையும் சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
தனுஷ் நடித்த ‘வடசென்னை’ திரைப்படத்தின் கதைக் கோட்டில் இருந்து இந்த படம் உருவாகும் என வெற்றிமாறன் முன்பு குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பெரிதாக உயர்ந்தது.
சமீபத்தில் அளித்த நேர்காணலில், இந்த திரைப்படம் ஐந்து எபிசோடுகளாக எடுக்கப்படும் என்றும், அதில் முதல் எபிசோடிற்கான திரைக்கதை மட்டும் முடிவடைந்துள்ளதாகவும் வெற்றிமாறன் தெரிவித்தார். மேலும், படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. கலைப்புலி தாணு தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் தலைப்பையும், போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
போஸ்டரை பகிர்ந்த தாணு, “ஆளப் பிறந்த அரசன் – வெற்றியுடன் சிலம்பரசன்” என பதிவு செய்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், சிம்புவின் ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கும் வாய்ப்பும் பேசப்படுகிறது. வெற்றிமாறன் படங்களுக்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ், இந்தப் படத்திற்கும் இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு – வெற்றிமாறன் – கலைப்புலி தாணு கூட்டணி ஒன்றாக இணைந்துள்ள ‘அரசன்’ திரைப்படம் தற்போது திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.