“துள்ளுவதோ இளமை” நடிகர் அபிநய் காலமானார் !

சென்னை:
“துள்ளுவதோ இளமை” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் நினைவில் இடம் பிடித்த நடிகர் அபிநய், உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

திரையுலகில் நடிகராகவும், டப்பிங் கலைஞராகவும் தன் தடத்தை பதித்திருந்த அபிநய், சில ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிலையான வருமானம் இல்லாத காரணத்தால், வறுமையில் தவித்த அவர், அண்மையில் மருத்துவச் செலவுக்காக உதவி கோரியும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அந்தக் காணொளி வெளியானபின், பலரும் அவருக்காக நிதியுதவி வழங்கினர். குறிப்பாக, ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இணைந்து நடித்த நடிகர் தனுஷ், ரூ.5 லட்சம் உதவி செய்ததாகத் தகவல். அதேபோல், KPY பாலாவும் ரூ.1 லட்சம் நிதி உதவி செய்து ஆதரவு அளித்திருந்தார்.

அபிநய், ‘சிங்கார சென்னை’, ‘பொன் மேகலை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ‘துப்பாக்கி’ படத்தில் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு, ‘அஞ்சான்’, ‘பையா’, ‘காக்கா முட்டை’ போன்ற படங்களில் சில கதாபாத்திரங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்து திறமையை வெளிப்படுத்தியவர்.

அண்மையில் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது, தன் உடல்நிலை குறைந்து வருவதாக அவர் பகிர்ந்திருந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் மறைவுச் செய்தி, சக கலைஞர்களும், ரசிகர்களும் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். திறமையும் உழைப்பும் இருந்தும், வறுமை துயரத்தில் முடிந்த அவரது வாழ்க்கை, திரையுலகிற்கு ஒரு சோக நினைவாக மாறியுள்ளது.

Exit mobile version