இனிமேல் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களைத் தயாரிக்கப் போவதில்லை என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.
‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன், தொடர்ந்து ஆடுகளம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார். இயக்குனராக பாராட்டுகள் பெற்று வரும் அவர், Grass Root Film Company என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாகவும் சில படங்களை தயாரித்து வந்தார்.
அதன் கீழ் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட Bad Girl, மனுஷி உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்பாக தணிக்கை வாரியத்திலும் நீதிமன்றத்திலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக, ஆன்ட்ரியா நடித்த மனுஷி படத்தை இயக்கியவர் கோபி நாயினார். இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து, வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் போது, 25 காட்சிகளை நீக்கவும், 12 காட்சிகளை மாற்றவும் தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. ஆனால், சில காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பட வெளியீடு சிக்கலில் சிக்கியது.
இந்த நிலையில், தயாரிப்பில் இருந்து விலகுவதாக வெற்றிமாறன் அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது :
“Bad Girl திரைப்படம்தான் Grass Root நிறுவனத்தின் கடைசி படம். அதற்குப் பிறகு கம்பெனியை மூடப் போகிறோம். இயக்குனராக இருப்பது மிகவும் சுதந்திரமானது; ஆனால் தயாரிப்பாளராக இருப்பது மிகுந்த அழுத்தம் நிறைந்தது. அதனால் இந்த முடிவு எடுத்துள்ளோம்” என்றார்.
மேலும், “இன்னும் 10 நாட்களில் வாடிவாசல் அப்டேட் வெளியாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.















