வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பதவி வகித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான கே.ஜி. அருண் ராஜ், தன்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ்நாட்டில் இன்னும் 12 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக, ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதேபோல, திமுகவை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில், பாஜகவை தன்னுடைய கூட்டணியில் இணைத்து பலத்தை பெருக்கியுள்ளது அதிமுக.
இருபெரும் திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் முதல்முறையாக தேர்தல் களத்தில் இறங்குகிறது விஜய்யின் தவெக. இளைஞர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்ய தவெக முயற்சி செய்து வருகிறது.
இருப்பினும், அரசியல் களத்திற்கு வராமல் வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்து வருவதாக விஜய் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், மிக பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது தவெக. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அக்கட்சியில் முக்கிய நபர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது, அது யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாரும் அல்ல தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான கே.ஜி. அருண் ராஜ். பீகாரில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பதவி வகித்து வரும் இவர், விருப்ப ஓய்வு கோரி இருந்தார். தற்போது, குடியரசு தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், அருண் ராஜ், தவெகவில் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.