வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள், உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி வருகின்றன. 389 ஆண்டுகளாக கல்விக் கோபுரமாக விளங்கும் இந்த கல்விய நிறுவனம், தற்போது அரசியல் உள்நோக்கத்தால் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகிறது.
மாணவர் போராட்டங்கள்
வளாகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என டிரம்ப் பல்கலைக்கழகங்களை வலியுறுத்தினார். ஆனால் ஹார்வர்டு அதனை ஏற்க மறுத்ததால், அதற்கு வழங்கப்படவிருந்த 2.2 பில்லியன் டாலர் மானியங்களும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களும் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
வெளிநாட்டு மாணவர்களுக்கு தடைகள்
இந்த சூழலில், ஹார்வர்டுவில் ஆண்டுதோறும் சேரும் சுமார் 800 வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை மீதும் தடையை அமல்படுத்தியது டிரம்ப் நிர்வாகம். இது பல்கலைக்கழக நிர்வாகத்தையும், சர்வதேச மாணவர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
நீதிமன்றம் தற்காலிக நிவாரணம் வழங்கியது
இந்நிலையில், டிரம்ப் உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், டிரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தும் தீர்ப்பை வழங்கியது. இதனால், ஹார்வர்டில் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.
இளவரசியின் கல்வி பாதை தடுமாறுமா?
இந்த சர்ச்சையின் நடுவே, பெல்ஜியம் நாட்டின் இளவரசியும் வருங்கால ராணியுமான எலிசபெத் (வயது 23) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவருகிறார். முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ள அவர், தற்போது தொடரும் கல்வி பாதைக்கு தடையாக டிரம்ப் உத்தரவு அமைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பெல்ஜிய அரச அரண்மனை செய்தித் தொடர்பாளர் லோர் வாண்டூர்ன் கூறியதாவது:
“இளவரசி எலிசபெத் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். தற்போது நிலைமையை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையின் தாக்கம் விரைவில் தெரியவரும்.”