சென்னை : பூவையார் ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், அகத்தியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய மூத்த இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், “இங்கே மேடையில் இருக்கும் அனைவரையும் என் பிள்ளைகள் என சொல்லலாம். குறிப்பாக நண்பர் அகத்தியன் – அவர் இயக்கிய ‘காதல் கோட்டை’ போல ஒரு ஆழமான காதல் கதையை இன்று வரை யாரும் சொல்லவில்லை,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது : “இப்போதைய டிரெண்ட் என்னவென்றால், சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தால் பணம் திரும்பிவிடும் என நினைக்கிறார்கள். ஆனால் நல்ல கதைகளுக்கு மதிப்பு கொடுக்க யாரும் முன்வருவதில்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனரை நம்பி 2.5 கோடி முதலீடு செய்திருப்பது பெருமைக்குரியது. அந்த நம்பிக்கை வெற்றி பெறும் என நம்புகிறேன்.”
சமூகத்தில் சினிமாவின் தாக்கத்தைப் பற்றி கவலை தெரிவித்த அவர், “இப்போது சினிமா வேறு, வாழ்க்கை வேறு என யாரும் நினைப்பதில்லை. சினிமாதான் வாழ்க்கை என பலர் எண்ணுகிறார்கள். பள்ளி மாணவர்களே கத்தி எடுத்துச் செல்லும் நிலை வந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. சினிமா என்பது கடவுள் கொடுத்த சக்திவாய்ந்த ஊடகம். அதை நல்ல விதமாக சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும்,” எனவும் கூறினார்.