நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வடலிவிளை பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்நுழைந்து வகுப்பறைகள், பூந்தொட்டிகள், குடிநீர் குழாய்கள், மின்விசிறிகள், ட்யூப்லைட்டுகள் உள்ளிட்டவற்றை அடித்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல மாணவ மாணவியர்கள் கல்வி கற்கின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி அவர்கள் திறந்து வைத்திருந்தார். மேலும், பள்ளி வளாகத்தில் அழகுபடுத்தும் வகையில் ஏராளமான பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தற்போது கோடை விடுமுறை காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை பள்ளி தலைமை ஆசிரியர், வசதிகள் குறித்து ஆலோசனைக்காக பள்ளிக்கு வந்திருந்தார். பின்னர் பள்ளியை பூட்டி விட்டு சென்றார்.
இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், மூன்று வகுப்பறைகள் சேதமடைந்ததையும், 50க்கும் மேற்பட்ட பூச்செடிகள் உடைக்கப்பட்டதையும், குடிநீர் குழாய்கள், மின்விசிறிகள் மற்றும் ட்யூப்லைட்டுகள் உடைக்கப்பட்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் உள்நுழைந்து இச்சம்பவத்தை நிகழ்த்தியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.