மயிலாடுதுறையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியின் நினைவாக தீப்பாய்ந்தாள்அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியின் நினைவாக கட்டப்பட்ட தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயத்தில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா. 700 க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் தவெக கொடியுடன் தீ மிதித்து கவனத்தை ஈர்த்ததால் பரபரப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரிக்கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் கோயிலில் சிலைவைத்து அப்பகுதி பொதுமக்கள் நூற்றாண்டுகள் கடந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தீப்பாய்ந்தாள் அம்மன் நினைவாக இக்கோயில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 134 -ஆம் ஆண்டாக தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் சக்தி கரகம் புறப்பட்டது. இதில் விரதமிருந்த பக்தர்கள் அம்மனுக்கு உகந்த மஞ்சள் நிற ஆடை அணிந்தும், அலகு காவடி எடுத்தும் ஊர்வலமாக புறப்பட்டு, மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியே வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தனர். 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் தீமிதித்த இளைஞர் ஒருவர் திடீரென
TVKகொடியுடன் தீமிதித்தார். அப்போது தவெக கொடியை இளைஞரின் கையில் இருந்து நிர்வாகத்தினர் பிடுங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கோயிலில் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதியில் மக்களின் பெரும் நம்பிக்கை என்பதால், ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தீமிதித்து மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோயில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது.

Exit mobile version