தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைத்து ஒரு பெரிய படத்தை உருவாக்குவது சாதாரண விஷயம் அல்ல. அந்த முயற்சி வெற்றி பெற, சரியான திரைக்கதை மற்றும் திறமையான இயக்கம் தேவைப்படுகிறது. இந்த முயற்சியில் வெற்றி பெற்றவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவர் உருவாக்கிய Lokesh Cinematic Universe (LCU) இப்போது தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.
இந்த LCU யில் புதிய படைப்பாக உருவாகும் திரைப்படம் தான் ‘பென்ஸ்’. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் வெகுவிமரிசையாக தொடங்கியது.
படத்தின் பூஜை விழாவில் கதாநாயகன் ராகவா லாரன்ஸ், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி இரண்டு நடிகர்கள் இன்னும் இணைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகிய படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கதையை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ், அதேசமயம் படத்தின் வழங்குநராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சம்யுக்தா மேனன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளராக மியூசிக்கல் சென்சேஷன் சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவு – கௌதம் ஜார்ஜ், படத்தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – ஜாக்கி, சண்டைப் பயிற்சி – அனல் அரசு ஆகியோரும் இந்தப் பிரம்மாண்ட படத்தில் பணியாற்றுகின்றனர்.
இந்த மெகா பட்ஜெட் படத்திற்கு நாட்டின் பல முக்கிய நகரங்கள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 120 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய அதிரடி பொழுதுபோக்கு திரைப்படமாக ‘பென்ஸ்’ உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.