நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
முருகதாஸ் கடைசியாக இயக்கிய சிக்கந்தர் சல்மான் கான், ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தாலும், வசூலில் தோல்வியடைந்தது. அதற்கு முன் 2020-ல் வெளியான தர்பார் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், மதராஸி மூலம் அவர் மீண்டும் கம்பேக் கொடுப்பாரா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிரடி + காதல் கலவையுடன், “துப்பாக்கி யார் கையிலிருந்தாலும் நான் தான்டா வில்லன்” என வித்யூத் ஜாம்வால் கூறும் வசனமும், டான்சிங் ரோஸ் ஷபீர் நடித்த வில்லத்தனமும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்நிலையில், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான வித்தர்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் மதராஸி குறித்து முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில், “ஏ.ஆர். முருகதாஸ் – அனிருத் – சிவகார்த்திகேயன் மூவரின் சரவெடி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இப்படம் முருகதாஸுக்கு வெற்றிகரமான கம்பேக் ஆக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.