பதக்கம் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனைகள் பரிதவிப்புக்கு உள்ளான அவலம். ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் முறையான அடிப்படை வசதிகளை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்யாததால் வீரர் வீராங்கனைகள் அவதி
தமிழகம் முழுவதும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்டம் தோறும் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தன.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 12,000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஐந்து விளையாட்டு பிரிவுகளின் கீழ் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
அவர்களுக்கு தங்கம் வெள்ளி மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்ந்த அலுவலர்கள் முறையான நாற்காலி வசதி தண்ணீர் வசதி கழிப்பிட வசதி எதுவும் செய்யாமல் மெத்தன போக்காக கடமைக்கு நிகழ்ச்சியை நடத்தியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் இருக்க இடம் இன்றி மரங்களின் நிழலில் மைதானத்தின் ஓரமாக அமர்ந்து நீண்ட நேரமாக காத்திருந்து அவதிக்கு உள்ளாகினர்.
அதுமட்டுமின்றி மாணவ மாணவிகளுக்கு தேவையான தண்ணீர் கழிப்பிட வசதி என்று எதையும் முறையாக ஏற்பாடு செய்யாத சூழ்நிலையில் நிகழ்ச்சியும் குறிப்பிட்ட நேரத்திற்கு துவங்காமல் சுமார் ஒன்றரை மணி நேரம் காலதாமதம் ஆனதால் பதக்கங்களை வாங்க வந்த வீரர் வீராங்கனைகள் மிகவும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.













