கிரிக்கெட் உலகின் ‘தல’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்.எஸ். தோனி, நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்துள்ள ‘தி சேஸ்’ டீசர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதுகாப்புப் படை வீரர் போன்று தோற்றமளித்து, கடினமான தொனியில் தோன்றும் தோனியின் லுக் ரசிகர்களை பரபரப்பாக்கியுள்ளது. எனினும், இது திரைப்படமா, வலைத் தொடரா அல்லது விளம்பரமா என்ற விவரங்கள் எதுவும் டீசரில் வெளியாகவில்லை.
‘தி சேஸ்’ எனப் பெயரிடப்பட்ட இந்த படைப்பை இயக்கியிருப்பவர் வாசன் பாலா. அதற்கான டீசரை நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில் வெளியாகும் என்று மாதவன் குறிப்பிட்டிருப்பதால், இதன் முழு வடிவம் பற்றிய தகவல் ரசிகர்களிடையே அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
சிலர், பாலிவுட் படத்தில் தோனி நடிக்கிறார் எனக் கூறியிருந்தனர். ஆனால், தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒரு திரைப்படம் அல்ல, விளம்பரமாக இருக்கக் கூடும் என்பதே வட்டாரத் தகவல்கள். அதே நேரத்தில், எந்த நிறுவன விளம்பரம் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
2020ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, 2025 மே மாதத்தில் தனது இறுதி ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி, தனது அசாத்திய கேப்டன்சியுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிரோபி வெற்றி பெற்ற இந்திய அணியை வழிநடத்தியவர் என்ற பெருமை தோனிக்குச் சொந்தம்.
ஏற்கனவே பல விளம்பரங்களில் தோன்றிய தோனி, இப்போது வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமாவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.