‘உங்களை வீட்டுக்கு அனுப்ப அந்த ஒரு வார்த்தை போதும் முதல்வரே’– எச்சரிக்கை விடுத்த வானதி சீனிவாசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஏற்கனவே பிரச்சார வேகத்தை அதிகரித்துள்ளன. இந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம். இது பாஜகவின் பாடல் அல்ல; இது நம் தேசத்தின் பாடல். பிரதமர் நரேந்திர மோடியே முன்னின்று கொண்டாடி வருகிறார். ஆனால் தமிழ்நாடு அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்க மறுக்கிறது,” என்றார்.

“வ.உ.சி சிலை முன்பு பள்ளி மாணவர்களுடன் வந்தே மாதரம் பாட திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவல்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது. தேசபக்தியை வெளிப்படுத்தும் எந்தச் செயலும் திமுக அரசுக்கு பிடிக்கவில்லை போல. வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தமிழ்நாட்டின் தேச உணர்வை அவமதிப்பதாகும்.”

“ஒரு இடத்தில் அனுமதி மறுத்தாலும், ஒவ்வொரு தெருவிலும் இந்தப் பாடலை பாடுவோம். ‘வந்தே மாதரம்’ என்ற ஒரு வார்த்தை போதுமே முதல்வரே – உங்களை வீட்டுக்கு அனுப்ப!” என்று வானதி சீனிவாசன் எச்சரித்தார்.

“தேர்தல் ஆணையத்தின் SIR விவகாரம் குறித்து திமுக அரசு நாடகமாடுகிறது. தேர்தல் வாக்காளர் பட்டியலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைவரின் கடமை. ஆனால் திமுகவினர் தாங்களே அந்தப் படிவங்களை நிரப்பி பொதுமக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியிலேயே உள்ளனர்,” என்றார்.

அவர் மேலும், “சினிமா பாடல்களை அரசியலில் பயன்படுத்துவது புதிதல்ல. நடிகர் விஜய் யாருடன் சேரப் போகிறார் என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.

Exit mobile version