சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்’ எனும் தலைப்பில் நடைபெறும் இவ்விழா, மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆரம்பமாகிறது.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜா கடந்த மார்ச் மாதம் லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்த்தி, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதை முன்னிட்டு, அவரது இசைச் சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு இந்த சிறப்பு விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கிடையில், இளையராஜாவின் பொன் விழாவிற்காக வரவுள்ள வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அழைத்துச் செல்ல தமிழக அரசு சார்பில் பிரத்யேக பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.