தேர்தலில் வெற்றி பெறுவதாலோ, தோற்றுப் போவதாலோ விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் பின்னடைவை சந்திக்காது. அதனால்தான் நான் தலைவர்களை உருவாக்குகிறேன் என்று திரும்பத் திரும்ப கூறுகிறேன் என திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு..
திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மருத்துவரணி செயலாளர் சேகர் என்கிற தாமரையாரின் இல்ல திருமண நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களுக்கு மாலை மற்றும் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய திருமாவளவன் கூறும் போது..
நான் வந்ததிலிருந்து மைக் பிரச்சினையாக இருக்கிறது.. கீச் கீச் என்று கேட்கிறது.. என்றார்..
தொடர்ந்து பேசிய திருமாவளவன் கூறும் போது …
குவாட்டர் வாங்கி தண்ணீர் அடிப்பவனுக்கு மகிழ்ச்சி இருக்கும். என்னதான் மகிழ்ச்சி இருந்தாலும் அவருக்கு மனசுக்குள்ளே ஒரு உறுத்தல் இருக்கும். குற்ற உணர்வு இருக்கும்.
அவ்வளவு எளிதாக நம்மை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாது. ரெண்டு சீட்டு வைத்துக் கொண்டு இவ்வளவு ஆட்டமா..? என்று கேட்கிறார்கள். அந்த ரெண்டு சீட்டு இல்லாம தான் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்தார்கள் என்பது அது அவர்களுக்கு தெரியவில்லை. ஆட்சி அமைப்பதற்கு அந்த ரெண்டு சீட்டு அவசியம் தேவை. ஆகவே அந்த ரெண்டு சீட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
நம் மீது அனைவருக்கும் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. இரண்டு இடத்தில் ஜெயித்து விட்டு அமைச்சர் பதவி வாங்கி விட்டார்கள் என்று காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகிறார்கள். இரண்டு இடத்தில் ஜெயித்ததை நாம் பெரிதாக நினைக்கவில்லை. சாதனையாக நினைக்கவில்லை. இந்த இரண்டு சீட்டு ஜெயித்ததால் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெறப்போவதில்லை. சாதிய வன்கொடுமைகள் உடனே நின்று விடப் போவதில்லை.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் கூட இது போன்ற வன்கொடுமைகள் தொடரும். அதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமே பொறுப்பில்லை.
திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, இன்று தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் இருக்கும் சூழலிலும் சரி, நாளை நாமே ஆட்சியில் இருந்தாலும் சரி இந்த சமூகத் தீமைகள் உடனே நின்று விடாது. நான் கூறுவதை இந்த ஆட்சிக்கு வக்காலத்து வாங்குவதாக கூறி சிலர் விமர்சிப்பார்கள்.
திமுக ஆட்சியிலும் இதை நான் சொன்னேன். அப்போது திமுக சொம்பு என்றார்கள்.முட்டுக் கொடுக்கிறான் திருமாவளவன் என்றார்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் இது நடக்கும்.
இந்த அணியில் சேர்ந்தால் இன்னொரு அணியோடு உறவே கொல்லக் கூடாது, நட்பே வைத்திருக்கக் கூடாது, நட்பு பாராட்ட கூடாது. நட்பில் இருப்பதாக கூட சொல்லக்கூடாது. சொன்னால் அது நம்பிக்கைக்கு எதிரானது துரோகமானது என்கிறார்கள்.
விடுதலை சிறுத்தை கட்சி இடதுசாரி அரசியலை முன்னெடுக்கிற ஒரு கட்சி. அப்படி என்றால் கம்யூனிஸ்டுகளும் விடுதலை சிறுத்தைகளும் ஒன்றா..? என்ற கேள்வி வரலாம். அடிப்படையில் கொள்கைகளில் ஒன்று. ஆனால் ஒரு பிரச்சனையை எவ்வாறு அணுகுவது என்பதில் வேறுபாடுகள் இருக்கும். முரண்பாடுகள் இருக்கும். திமுகவும் அதிமுகவும் பெரியார் அண்ணா போன்ற ஒரே கொள்கை தலைவர்கள் தான் கொண்டிருக்கின்றன.
ஆனால் இரண்டு கட்சிகளும் முற்றுக்கொன்று பகை பாராட்டுகின்றன. அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில், நடைமுறை அரசியலில் அணுகுமுறைகளில் மாறுபாடு. வேறுபாடு எனவே இன்னொரு கட்சி உருவாகிறது. அதிலிருந்து இன்னொரு கட்சி உருவாகிறது.
கொள்கை அளவில் செயல்படும்போது கட்சிகளுக்கு இடையே மோதல் வரலாம், செயல்முறைகளில் மோதல் வரலாம், இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு இயக்குவது தான் அரசியல்.
இணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில் இணைந்து செயல்படுவது, விலகி நிற்க வேண்டிய இடத்தில் விலகி நிற்பது, ஆனாலும் மானுட உறவை பேணி பாதுகாப்பது என்பது முக்கியம்.
விசிக அனைத்து தரப்பு மக்களுக்காக போராடும் ஒரு பேரியக்கம். தேர்தல் வெற்றி தோல்விகளால் இது ஒருபோதும் பாதிக்கப்படாது. வெல்வதாலோ தோற்றுப் போவதாலோ இந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் பின்னடைவை சந்திக்காது. அதனால்தான் நான் தலைவர்களை உருவாக்குகிறேன் என்று திரும்பத் திரும்ப கூறுகிறேன் என்றார்.














