ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு.
ஆரோவில் நில விவகாரம் மற்றும் தண்ணீர் சேமிப்பு திட்டம் குறித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் நடைபெறுவதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆரோவில் மாத்ருமந்திரை சுற்றி சுமார் 113 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 100 மீட்டர் அகலமும், 10 மீட்டர் ஆழமும் கொண்ட மிகப்பெரிய பிளாஸ்டிக் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்காக நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுவதுடன், மரங்கள் வெட்டப்படுவதும், மண் அகற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இது மழைநீர் சேமிப்பு திட்டம் என தெரிவிக்கப்பட்டாலும், பிளாஸ்டிக் லைனிங் அமைப்பதால் இது மழைநீர் சேமிப்பு திட்டமாக இருக்க முடியாது என அவர் கூறினார்.
மேலும், அன்னபூர்ணா ஃபார்ம்ஸ் பகுதியில் உள்ள 135 ஏக்கர் நிலத்தில் சுமார் 100 ஏக்கர் நிலத்தை ஆரோவில் நிர்வாகம் ஐஐடி சென்னைக்கு ஒரு ரூபாய் குத்தகை அடிப்படையில் வழங்கியதாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக பதிவுத்துறை ஐஜியிடம் ஏற்கனவே புகார் அளித்ததாகவும், அதற்கு பதிவுத்துறை அலுவலகத்திலிருந்து பதில் கிடைத்துள்ளதாகவும் பியூஷ் மானுஷ் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட ஆவணப் பதிவு தொடர்பாக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறப்படும் நிலத்தை குறைந்த தொகை குத்தகையில் வழங்கியிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நில ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலத்தை மீண்டும் ஆரோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக பியூஷ் மானுஷ் தெரிவித்தார்.
பேட்டி ;-பியூஷ் மானுஷ் சமூக ஆர்வலர்.













