நரிமணம்–குத்தாலம் சாலையில் எரியாத தெருவிளக்குகள்: இரவு நேரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கும் வீடியோ வைரல்; இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வீ தி லீடர்ஸ் மனு;
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட நரிமணம் ஊராட்சியில் உள்ள சாலைகளில் தெருவிளக்குகள் எரியாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நரிமணத்திலிருந்து நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். மாலையில் பள்ளி மற்றும் பயிற்சி வகுப்புகள் முடிந்து இரவு நேரத்தில் ஊர் திரும்பும் மாணவர்கள், நரிமணம் முதல் குத்தாலம் வரை உள்ள சாலையில் தெருவிளக்குகள் முற்றிலும் எரியாத காரணத்தால் கடும் இருளில் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
மேலும், இப்பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள மதகுகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனவும், சமூக விரோதச் செயல்களைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.













