நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியில் பெரும் வெற்றியை கண்டது.
அடுத்ததாக, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சிவகார்த்திகேயனை முன்னிறுத்தி புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளன. டைம் டிராவலை மையமாகக் கொண்ட நகைச்சுவை மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படம், வெங்கட் பிரபுவின் தனிச்சிறப்பு பாணியில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். வெங்கட் பிரபுவின் படங்களுக்கு வழக்கமாக யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது வழக்கமாக இருந்த நிலையில், இந்தப் படத்தில் அந்த கூட்டணி முறிவடைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இணைந்திருக்கும் அனைத்து திரைப்படங்களும் இதுவரை வெற்றிபெற்றுள்ளன. அதேபோல், இந்தப் படம் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருகி வருகிறது.
தற்போது, சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் இன்னும் 50 நாட்களில் திரைக்கு வரவுள்ளது. இந்த இரண்டு படங்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.