எஸ்.ஐ.ஆர். சிறப்பு திருத்தப் பணிக்கு எதிர்ப்பு – போராட்டத்தில் த.வெ.க பலத்தை காட்ட உத்தரவு : விஜய்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். (சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்) பணிக்கு எதிராக நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், த.வெ.க. தனது அமைப்புச் சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று கட்சித் தலைவர் விஜய் மாவட்ட செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரசார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த பின்னர், விஜய் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை கட்சி செயல்பாடுகளில் ஒரு மாதம் சுமூகமாக இருந்தனர். தற்போது, மீண்டும் கட்சி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகமெங்கும் த.வெ.க. நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னை நிகழ்வில் பொதுச் செயலர் ஆனந்த் கலந்து கொள்ள உள்ளார்; மற்ற மாவட்டங்களில் மாநில நிர்வாகிகள் தலைமையேற்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை வலியுறுத்தி, மாவட்ட செயலர்களுக்கு விஜய் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், “போலீசார் அனுமதி அளித்துள்ள இடங்களில் மட்டுமே ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு அல்லது போக்குவரத்துக்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படக் கூடாது” என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், “வருங்கால தேர்தலில் தி.மு.க. மற்றும் த.வெ.க. இரண்டிற்கும் இடையே நேரடி போட்டி இருக்கும்” என தொடர்ந்து கூறி வரும் விஜய், நாளைய ஆர்ப்பாட்டம் கட்சியின் பலத்தைக் காட்டும் வாய்ப்பாக இருக்கும் எனவும், அதனை தி.மு.க.-வை விட வலுவானதாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், “பலத்தை காட்டவும்… அதே நேரத்தில் போலீசார் விதித்த பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்கவும்” என்ற இரட்டை அறிவுறுத்தலால், சில மாவட்டச் செயலர்கள் குழப்பத்துக்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version