சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை தவெக நிர்வாகிகளுக்கு வழங்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டு விரிவான உத்தரவுகளை வழங்கினர்.
SIR நடவடிக்கைகள் தொடங்கிய 16 நாட்களுக்குப் பிறகு தவெக முழுமையாக களமிறங்குகிறது. தேர்தல் பணிகளில் மக்களுக்கு உதவுவதற்காக, ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் 16 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாக கட்சி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்சி நிர்வாகிகள் செயல்பாட்டில் ஈடுபடாத சூழ்நிலையில் உடனடி புகார் அளிக்க உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளைச் சுற்றி தமிழக அரசியலில் பெரும் விவாதம் நிலவி வருகிறது. படிவ விநியோகம் மற்றும் சரிபார்ப்பு பணிகளில் பல கோளாறுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுகவின் பூத் நிர்வாகிகள் பிஎல்ஓ-க்களுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று மக்களுக்கு படிவங்கள் வழங்கி உதவி செய்து வருகின்றனர். அதிமுக தரப்பும் இடைக்கிடையாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால் தவெக சார்பில் இதுவரை பூத் ரீதியான பணிகள் எதுவும் கவனிக்கப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவுக்குப் பிறகே தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். இருந்தாலும் அடித்தட்டு நிர்வாகிகள் நேரடியாக களமிறங்காத நிலை தொடர்ந்தது.
இந்த நிலையில், பணிகள் முடிவடைய இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தவெக ஒருங்கிணைந்த செயல்திட்டத்துடன் முன்னிலைக்கு வந்துள்ளது. பூத் வாரியாக நிர்வாகிகள் அதிகமாக உள்ள திமுக, அதிமுக போன்ற கட்சிகளைப் போல அல்லாமல், தவெக தொகுதி மட்டத்தில் தனிக் குழு அமைப்பது, அக்கட்சியின் அமைப்பு வலிமை குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது.
















