உலகம் முழுவதும் பிரபலமான ஜப்பானிய அனிமேஷன் தொடர் ஷின் சான் அடிப்படையாக உருவான புதிய படம் Shin Chan: The Spicy Kasukabe Dancers in India வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜப்பானிய மொழியில் தயாரான இப்படம், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
இத்திரைப்படத்தின் கதை, ஷின் சான் தனது நண்பர்களுடன் இந்தியாவுக்கு நடனப் போட்டிக்காக வரும் போது, தீய சக்தியாகக் காட்சியளிக்கும் “காசுகாபே”க்கு எதிராக போராடுவதை மையமாகக் கொண்டது.
சமீபத்தில் டெல்லி வந்திருந்த இப்படத்தின் இயக்குனர் மசகாசு ஹாஷிமோடோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ஷின் சான் கதாபாத்திரத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து விளக்கமளித்தார். “ஷின் சான் குழந்தைகளின் ஹீரோ என்பதால், அவர் செய்யும் விஷயங்கள் சிறார்களால் பின்பற்றப்படுகின்றன. அதனால் சில காட்சிகளை மாற்ற வேண்டியிருந்தது. உதாரணமாக, கார்டூனில் கதாப்பாத்திரங்களின் பின்புற காட்சிகளை தவிர்க்கும்படி நான் கூறியுள்ளேன். இவை அனைத்தும் சிறார்களின் நலனைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்ட மாற்றங்கள் தான்” என்றார்.
இந்தியாவில் உள்ளூர் அனிமேஷன் படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாததற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “ஜப்பானிய அனிமேஷன் உலகளாவிய தரத்தில் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் பார்வையாளர்கள் வெளிநாட்டு கன்டென்ட்களை எளிதாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் இந்திய அனிமேஷன் படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறுவது சற்றுக் கடினம்,” என்றார்.
மேலும் இந்திய சினிமா குறித்து பேசுகையில், “நான் பார்த்த முதல் இந்தியப் படம் Muthu: The Dancing Maharaja (1995). ரஜினிகாந்த் நடித்த அந்த படம் ஜப்பானில் மிகப் பிரபலமாகியது. அதற்கு பிறகு ஷின் சான் கதாப்பாத்திரம் இந்தியாவுக்கு சிறப்பாக பொருந்தும் என நினைத்தேன். இந்தப்படத்தின் மூலம் இந்திய இடங்களையும் அழகாகக் காண்பிக்க முடியும்,” என அவர் தெரிவித்தார்.