மும்பை : ஹிந்தி திரைப்பட மற்றும் டெலிவிஷன் உலகில் புகழ்பெற்ற நடிகை ஷெஃபாலி ஜாரிவாலா திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு 42 வயதாகும். 2002-ஆம் ஆண்டு வெளியான ‘Kaanta Laga’ இசை வீடியோ ஆல்பம் மூலம் புகழ்பெற்ற ஷெஃபாலி, பின்னர் ‘முஜ்சே ஷாதி கரோகி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். 2019-ஆம் ஆண்டு ‘Baby Come Naa’ என்ற வெப் தொடர் மற்றும் பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் விருப்பம் பெற்றவர். குறிப்பாக, 2019-இல் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அதிக கவனம் பெற்றார்.
இந்நிலையில், நேற்று இரவு மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரின் கணவர் பராக் தியாகி அவரை அந்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், மருத்துவர்கள் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மரணத்துக்கான காரணம் உறுதி செய்ய அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை உதவி அதிகாரி தெரிவித்ததாவது, “உடல் வேறொரு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் இறப்புக்கான சரியான காரணம் கூற இயலும்” என்றார்.
மேலும், மும்பை போலீசார் இந்த வழக்கை சந்தேக மரணமாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் குழுவினர் ஷெஃபாலியின் வீட்டை பார்வையிட்டு, தேவையான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இறுதி அறிக்கையைத் தொடர்ந்து மேலதிக தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது மறைவுக்கு திரையுலகினர், சக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.