கொச்சி :
இந்திய அளவில் பிரபலமான ராப் பாடகர் ‘வேடன்’ மீது, பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பிறந்த வேடன், தனது நேரடித் தோற்றமும், சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் பாடல்களாலும் குறுகிய காலத்திலேயே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். சமீபமாகவே அவரது பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு அதிகரித்து வந்த நிலையில், அவரை சுற்றியுள்ள சர்ச்சைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
பெண் மருத்துவர் ஒருவர் திக்காக்கரா காவல்நிலையத்தில் அளித்த புகாரில், “2021 முதல் 2023 வரையிலான காலத்தில் வேடன், திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், நம்பிக்கையை பயன்படுத்தி பணமும் பெற்றார்” என குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில், வேடன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திக்காக்கரா போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கு முந்தையதாக, கடந்த ஏப்ரல் மாதம், கனியம்புழாவில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் போதைப்பொருள் வழக்கில் வேடன் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது நண்பர்களுடன் தங்கியிருந்த வீட்டில் 6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேடன் உட்பட மொத்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு சம்பவங்களும் இணைந்து, சமூக வட்டாரங்களில் வேடனை எதிர்த்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.