சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தேக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள வட்டக்காடு வனப்பகுதி, பல்வேறு வகை அரிய விலங்குகளுக்கு உறைவிடமாக விளங்குகிறது. இந்த வனப்பகுதியின் பாதுகாப்பிற்காக சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, என்.எஸ். தோட்டம் பகுதியில் 2 பேர் வளர்ப்பு நாயுடன் உடும்புகளை வேட்டையாடுவதைக் கண்டு வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரையும் முற்றுகையிட்டுப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த காத்தான் மற்றும் அவரது மகன் அருள்குமார் என்பதும், அவர்கள் உடும்புகளை வேட்டையாடி சமைத்து சாப்பிடத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த வனத்துறையினர், சட்ட நடவடிக்கைக்காக ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.