சென்னை :
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே உள்ள உள்கட்சிப் பிரச்சனை, நேற்று முதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. தைலாபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அன்புமணியின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இன்று அதற்கான பதிலடியாக, அன்புமணி சோழிங்கநல்லூரில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 23 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 22 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அன்புமணி, “பொதுக்குழுவில் நீங்கள் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்கள். நம் அனைவரும் ஒருமித்து செயல்படவேண்டும். ராமதாஸின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தயார். நான் ஒரு தொண்டனாகவே செயல் படுகிறேன்” என்றார்.
மேலும், ஊடகவியலாளர்களிடம் பேச அவர் மறுத்து, “இதுகுறித்து விரைவில் விரிவாக பேசுவேன். தற்போது, கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கின்றோம். தயவுசெய்து வெளியேறுங்கள்” என கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில், பாமக பொருளாளராக இருந்த திலகபாமா, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக சையது மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை மறுப்பதுபோல், அன்புமணி தெரிவித்ததாவது: “பொதுக்குழு என்னை முறையாக தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. எனவே, நிர்வாகிகளை நியமிக்க அல்லது நீக்க அதிகாரம் எனக்கே உண்டு. பாமக பொருளாளராக திலகபாமா தொடருவார்” என்றார்.