திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களை முழுமையாக புறக்கணிக்கும் தமிழக அரசை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஏராளமானோர் வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் புதிதாக தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றது முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் உதவி இயக்குனர் மற்றும் கூடுதல் இயக்குனர் பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும், மகளிர் திட்டத்தில், திட்ட அலுவலர் பணியிடத்தில் வங்கி அதிகாரியை பணியமர்த்தும் அரசாணையை கைவிட வேண்டும், திட்ட இயக்குநர் பணியிடத்தில் இந்திய வன அலுவலர் அதிகாரியை நியமனம் செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் இன்று மாலை ஒரு மணி நேரம் முன்னதாக வெளிநடப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திருவாரூர் வட்டத் தலைவர் கல்யாண் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதவி இயக்குனர் பதவி உயர்வுகளை முழுமையாக வழங்க வேண்டும், பணி மேற்பார்வையாளர்கள், உதவி பொறியாளர்கள் ஆகியோருக்கு பதிவு உயர்வு வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சி துறைக்கு தொடர்பு இல்லாதவர்களை பணியமர்த்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் செந்தில், துணை தலைவர் அமர்நாத், வட்ட கிளை நிர்வாகிகள் தங்கதுரை, யோகானந்தம், சிவராஜ், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

















