ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு
சாலைமறியல்
500-க்கும் மேற்பட்டோர் போராட்டம் – கும்பகோணம்–மயிலாடுதுறை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள பழைய எண்ணெய்–எரிவாயு கிணறு KUT-9-ல் மீண்டும் பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் முயற்சிப்பதாகக் கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 கிணற்றில் பணிகளை மேற்கொள்வதற்காக ராட்சத குழாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக அப்பகுதி மக்கள் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பணிகள் நிறுத்தப்பட்டது? மேலும், கிணறு தொடர்பாக 8 வகையான ஆவணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், மாவட்ட நிர்வாகம் பணிகளைத் தொடர அனுமதி அளித்துவிட்டனர்.. இதையடுத்து கடந்த 2 நாட்களாக ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் பணிகளைத் தொடங்கியது-.
இதனால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பேராசிரியர் ஜெயராமன் தலைமையில், கும்பகோணம்–மயிலாடுதுறை சாலையில் ராஜகோபாலபுரம் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தச் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த குத்தாலம் வட்டாட்சியர், டிஎஸ்பி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக மராமத்துப் பணிகளை நிறுத்துவது, பொதுமக்கள் கோரிய 8 ஆவணங்களை 2 நாட்களுக்குள் வழங்குவது என அதிகாரிகள் உறுதியளித்தனர். தொடர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். தொடர்ந்து எண்ணெய்க் கிணறு பகுதியில் நடைபெற்று வந்த பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து பேராசிரியர் ஜெயராமன் கூறுகையில், எந்த அனுமதியும் இல்லாமல் ஓஎன்ஜிசி நிறுவனம் பணிகளை மேற்கொள்வதாகவும், அதற்கு மாவட்ட நிர்வாகம் துணைபோவதாகவும் குற்றம்சாட்டினார். பேச்சுவார்த்தையில் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

















