புழல் நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்
சென்னை: சென்னை அடுத்த மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 31வது வார்டு பகுதியில் அமைந்துள்ள புழல் நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில், பல நாட்களாக அகற்றப்படாமல் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எஸ்டேட்டின் பிரதான சாலை பகுதியில் மாநகராட்சி சார்பில் 10-க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த குப்பைத்தொட்டிகளில் 29வது மற்றும் 31வது வார்டு பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் உணவகங்களில் இருந்து சேகரிக்கப்படும் காய்கறி மற்றும் உணவுக் கழிவுகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதால், அவற்றில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையோரங்களில் தேங்கி சகதியாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருவதாகவும், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், குப்பைத்தொட்டிகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வழியாகவே பணிக்கு சென்று வருகின்றனர். இதனால் தொழிலாளர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும்போது, அங்கு பணியில் இருக்கும் சில ஊழியர்கள் மிரட்டும் தொனியில் பதிலளிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை அகற்றுவதுடன், பல நாட்களாக தேங்கியுள்ள குப்பைகள், கழிவுநீர் மற்றும் சகதியை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், நோய் தொற்று ஏற்படாத வகையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.













