நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாததால், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணங்கள் ரசிகர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வு, இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக அளவில் டிக்கெட் ரீபண்ட் செய்யப்பட்ட முதல் சம்பவமாக பேசப்பட்டு வருகிறது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தயாரிப்பு நிறுவனம் தணிக்கை குழுவிடம் சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தது. கடந்த மாதம் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் சில காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த மாற்றங்களை செய்து டிசம்பர் 18ஆம் தேதி மறுதணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே சென்னை, நெல்லை உள்ளிட்ட பல நகரங்களில் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. சில இடங்களில் ஒரு டிக்கெட் விலை ரூ.7000 வரை விற்பனையானதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் தணிக்கை சான்றிதழ் தாமதமான காரணத்தால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு டிக்கெட் தொகையை திருப்பி வழங்க வேண்டிய நிலை திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்டது.
தகவல்களின் படி, ரூ.4.50 லட்சம் வரை டிக்கெட் முன்பதிவு தொகை ரசிகர்களுக்கு ரீபண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ஒரே திரைப்படத்திற்கு இத்தனை பெரிய அளவில் டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்ட சம்பவம் இந்திய சினிமாவில் இதுவே முதல் முறை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.

















