சீர்காழியில் மனை பிரிவுகள் அமைக்க தடையாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் புகார்: மயிலாடுதுறை எஸ்பியிடம் ரியல் எஸ்டேட் சங்கம் மனு:-
சீர்காழி நகர் பகுதியில் மனை பிரிவுகள் அமைக்கும் நபர்களிடம், தான் ஏரியா கவுன்சிலர் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி “வெற்றி ரியல் எஸ்டேட் & லேண்ட் டெவலப்பர்ஸ் நல சங்கம்” சார்பில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் வந்த நிர்வாகிகள் அளித்த அந்த மனுவில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரம், மேல மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சட்டநாதர் சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தை, ராஜசேகர் என்பவர் குத்தகை உரிமையிலும் இருந்து வரும் இடத்தை திருக்கோவிலின் அனுமதியுடன் சிறிய மனைப்பிரிவுகளாகப் பிரித்து வீடு கட்டி குடிவருபவர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்த மனைப்பிரிவு அமைந்துள்ள இடத்திற்கு அருகில் வசிக்கும் ஜெயபால் என்பவரின் மகன் பாலமுருகன் என்பவர், ராஜசேகரிடம் தனக்கு 5000 சதுரடி இடம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜசேகர் இடம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பாலமுருகன், தனது மனைவி அந்தப் பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) என்று கூறிக்கொண்டு, “தன்னிடம் மனைப்பிரிவுகள் கொடுத்தால் தான் இந்த இடத்தில் உங்களால் மனைப்பிரிவுகள் அமைக்க முடியும்” என்று கூறி ராஜசேகருக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், குத்தகை உரிமையுடைய அந்த சொத்து குறித்து முகநூல் (Facebook) மற்றும் சமூக ஊடகங்களில் (Social Media) தவறான செய்திகளைப் பரப்பி, ராஜசேகரிடமிருந்து சொத்தை அபகரிக்கும் நோக்கில் பாலமுருகன் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும், இதனால் அந்தப் பகுதியில் மனைப்பிரிவுகள் அமைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே பலமுறை காவல் துறையில் புகார் அளித்தும், திமுக ஆட்சியில் திமுக கவுன்சிலர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் பாலமுருகனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள சங்க நிர்வாகிகள், மனைப்பிரிவு அமைப்பவர்களிடம் கவுன்சிலர் என்று கூறி தொடர்ந்து மிரட்டி வரும் பாலமுருகன் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என “வெற்றி ரியல் எஸ்டேட் & லேண்ட் டெவலப்பர்ஸ் நல சங்கம்” சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் புகார் தெரிவித்துள்ளனர்.















