இஸ்லாமாபாத் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான எல்லைத் தகராறுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார் என்று பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவமும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த பதிலடிகள் தொடர்ந்து எல்லை பிராந்தியங்களில் மோதல்களைத் தூண்டின.
இந்த சூழலில், அமெரிக்கா இடைமுகலாக தலையிட்டு, பதற்றம் ஓரளவு குறைய உதவியதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்திய அரசு எந்தவித வெளிநாட்டு அழுத்தமும் இல்லாமல், தாங்களே முடிவெடுத்ததாக தெரிவித்தது.
இந்நிலையில், சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், தற்போது மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார். “காஷ்மீர், நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண விரும்புகிறோம். இந்தியா போர்முனையைத் தேர்ந்தெடுத்தால், அதற்கு நாம் பதிலடி கொடுப்போம். ஆனால், அமைதிக்காக கலந்துரையாட தயாராக இருக்கிறோம்” என்றார்.
அதேவேளை, ஷபாஸ் ஷெரீப் துருக்கிக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தார். அங்கு அதிபர் எர்டோகனை சந்தித்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் துருக்கி அளித்த உதவிக்காக நன்றி தெரிவித்தார். இந்திய ராணுவம் கூறியதாவது, பாக்-இந்தியா மோதலின்போது துருக்கியின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
துருக்கி பயணத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் தற்போது ஈரானுக்குச் சென்றுள்ளார்.