சென்னை : நடிகர் ரவி மோகன் தொடங்கிய ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவன தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, ஜெனிலியா, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ரவி மோகனின் புதிய முயற்சி
‘ஜெயம்’, ‘எம் குமரன் மகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது சிவகார்த்திகேயன் உடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’-ஐ துவங்கியுள்ளார்.
முதல் படத்தில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தானே நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இரண்டாவது படத்தை யோகி பாபுவை வைத்து இயக்குநராக அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கார்த்தியின் பாராட்டு
இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “ரவி மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத ஒரு ஆள். அவனால அப்படிச் சிந்திக்கவே முடியாது. சினிமாவை ஆழமாகக் கவனிக்கும், உலக சினிமாவை ஆராய்ந்து பார்க்கும் திறமை அவனுக்கு உண்டு. எடிட்டிங் பற்றியும் நல்ல அறிவு இருக்கிறது. ஆனாலும் வெளியில் அவ்வளவு தெரியாது. யோகி பாபுவை வைத்து இயக்குநராக அறிமுகமாகும் போது ரவியின் திறமைகளை உலகம் காணும்” என்று பாராட்டினார்.
ரவி மோகனின் நெகிழ்ச்சி
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த ரவி மோகன், “என்னை வாழ்த்த வந்திருப்பவர்களுக்கு நன்றி. சிலர் வாழ்த்த வேண்டாம் என்று நினைத்தாலும், நான் இங்குதான் இருப்பேன். என்னை எப்போதும் அக்கறையோடு பார்ப்பவர் ‘நிஜ வந்தியத்தேவன்’ கார்த்தி” என்று உருக்கமாகக் கூறினார்.