தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் பசுமையாக நிற்கும் நட்சத்திர ஜோடி ரஜினிகாந்த் – கமல் ஹாசன். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட பத்து திரைப்படங்களில் இணைந்து நடித்த இவர்களின் நடிப்பு இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாததாக உள்ளது.
ஒரு கட்டத்திற்குப் பிறகு தனித்தனியாக நடிக்கத் தொடங்கிய இந்த இருவரும், சுமார் 46 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரே படத்தில் இணைவார்கள் என்ற தகவல் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்பட்டது. மேலும், சைமா விருது வழங்கும் விழாவில் கமல் ஹாசன், இப்படம் குறித்த செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் இயக்குநரின் பெயரை வெளிப்படுத்தாமல் விட்டார்.
இந்த நிலையில், இன்று காலை ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரளா செல்ல விமான நிலையம் வந்திருந்த ரஜினிகாந்திடம், கமலுடன் இணையும் படத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரஜினி, “ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன். ஆனால் இயக்குனர் இன்னும் உறுதியாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற என் ஆசை இருக்கிறது. அதற்கு சரியான கதை, கதாபாத்திரம் வந்தால் நிச்சயமாக நடிப்பேன்,” எனத் தெரிவித்தார்.
இதனால், ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் ரஜினி–கமல் கூட்டணி எப்போது, எந்தக் கதையுடன் உருவாகும் என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.