மயிலாடுதுறை மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய்? நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததை தொடர்ந்து தற்போது காகங்களும் ஆங்காங்கே உயிரிழப்பதால் பொதுமக்கள் பீதி:- உயிரிழந்த காகங்களை உடற்கூறாய்வுக்கு ஆய்வுக்காக அனுப்பி உள்ளதாக கால்நடைத்துறை இணை இயக்குநர் தகவல்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் அருகேயுள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த வாரம் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் ஓரிரண்டு நாட்களில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே கொக்குகள் வான்கோழிகள் ஆகியனவும் உயிரிழந்தன. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் உயிரிழக்கும் சம்பவமானது தற்போது தொடர்ந்து வருகிறது. மயிலாடுதுறை, மன்னம்பந்தல், சித்தமல்லி, கஞ்சாநகரம், செம்பனார்கோவில், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு இடங்களில் காகங்கள் செத்து சாலையிலும், வீட்டுக்கூரைகளின் மேலும் விழுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அண்மையில் அண்டை மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தென்பட்டதன் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்திலும் இந்நோய் பரவி வருகிறதோ என மக்கள் பீதி அடைந்துள்ளனர். உயிரிழந்த காகங்களை ஆய்வுக்காக அனுப்பி உள்ளதாகவும், ப்ளூ காச்சல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கால்நடைத்துறை இணை இயக்குனர் அன்பரசன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் காகங்கள் உயிரிழப்பு தொடர்வது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.







