சென்னை: தொழில்பார்ட்னர் சூனியம் வைத்திருப்பதாகக் கூறி, 76 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மந்தைவெளி ஸ்ரீ வேங்கடட்ம டிரஸ்ட் பாக்கம் பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.ஆர். ரமேஷ் (வயது 56) என்பவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்ட தொழிலதிபர் ஆவார். சில நாட்களாக தொழில் சரியாக நடைபெறவில்லை என கவலையுடன் இருந்த அவர், இந்த விவகாரம் குறித்து நண்பரிடம் பகிர்ந்துள்ளார்.
அப்போது, பெரம்பூர் பெரியார் நகரைச் சேர்ந்த பூசாரி பூர்ண பிரகாஷ் என்பவர் கூறுவது எல்லாம் நடக்கும் எனும் பரிந்துரை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பூசாரியை சந்தித்த ரமேஷிடம், “தான் அறநிலையத் துறையில் உறுப்பினராக உள்ளேன்” என கூறியுள்ளார் அந்த பூசாரி.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி, ரமேஷின் வீட்டிற்கு வந்து யாகம் செய்த பூசாரி, “உங்கள் தொழில்பார்ட்னர் சூனியம் வைத்துள்ளார். பரிகாரம் செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என மிரட்டினார்.
இதையடுத்து, ரமேஷ் தனது மனைவியின் இரண்டு தங்க செயின்கள் மற்றும் ஒரு வலையல் என மொத்தம் 76 கிராம் தங்க நகைகள், மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றை பூசாரியிடம் ஒப்படைத்தார். ஆனால், பூஜை முடிந்த பிறகும் நகைகளை திருப்பிக்கொடுக்கவில்லை. நேரில் சென்று கேட்டபோதும், “உங்கள் குடும்பம் மீது மீண்டும் சூனியம் வைப்பேன்” என மிரட்டினார்.
இதனைத் தொடர்ந்து, ரமேஷ் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, பூர்ண பிரகாஷ் என்பவரை கைது செய்து, அவரது வசமிருந்த தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.