சென்னை:
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 25 வயதான இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உறுதி செய்துள்ளது.
இச்சம்பவம், கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர் தீவிர நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்ததிற்குப் பிறகு, மாநிலத்தில் பதிவாகும் இரண்டாவது கொரோனா மரணம் ஆகும்.
சமீபத்தில், சென்னை நகரில் வசித்து வந்த 25 வயதான இளைஞர் ஒருவர் ஆஸ்துமா சிக்கலால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் தெரிவித்ததாவது, “இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமா பிரச்சனை இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டதால், உடல்நிலை மோசமடைந்தது,” என்றனர்.
இந்தச் சம்பவத்தால், இளைய வயதினரிலும் கொரோனா உயிருக்கு ஆபத்தானது என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.
இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,961-ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.