தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெரியகுளம் தாலுகாவிற்குட்பட்ட லட்சுமிபுரம், சருத்துப்பட்டி, முருகமலை, தாமரைக்குளம் மற்றும் வடுகபட்டி ஆகிய பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராக உள்ள கரும்புகளைக் கொண்டு, விவசாயிகள் தங்களது தோட்டங்களிலேயே தற்காலிக ஆலைகளை அமைத்து, பாரம்பரிய முறையில் வெல்லம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கரும்புச் சாற்றைப் பெரிய கொப்பரைகளில் ஊற்றி, நீண்ட நேரம் காய்ச்சிப் பாகு எடுத்து, மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து 42 கிலோ எடையுள்ள மூடைகளாக விற்பனைக்குத் தயார் செய்கின்றனர்.
லட்சுமிபுரம் பகுதியில் விளையும் கரும்புகளில் இனிப்புச் சத்து அதிகமாக இருப்பதோடு, தனித்துவமான நறுமணமும் கொண்டிருப்பதால், இங்கு உற்பத்தியாகும் வெல்லத்திற்குத் தமிழகம் மட்டுமின்றி கேரளா மாநிலத்திலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. இங்குள்ள நான்கு முக்கிய ஏலக் கடைகள் மூலம் வாரத்தில் நான்கு நாட்கள் ஏலம் நடைபெறுகிறது. வழக்கமாக வாரத்திற்கு 30 டன் வரை இருந்த வெல்லத்தின் வரத்து, பொங்கல் தேவையை முன்னிட்டு தற்போது 50 டன்னாக உயர்ந்துள்ளது. சந்தை நிலவரப்படி 42 கிலோ கொண்ட ஒரு மூடை கலர் வெல்லம் ரூ. 2,000-க்கும், பச்சை வெட்டு ரூ. 1,900-க்கும், செங்கால் ரூ. 1,700-க்கும், கருப்பு வெல்லம் ரூ. 1,500-க்கும் விற்பனையாகிறது.
இருப்பினும், இடுபொருட்கள் மற்றும் கூலி உயர்வு காரணமாகத் தங்களுக்குப் போதிய லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து லட்சுமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறுகையில், ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்குச் சுமார் ரூ. 45 ஆயிரம் வரை செலவாகிறது என்றும், ஒரு ஏக்கருக்குக் கிடைக்கும் 40 டன் கரும்பு மூலம் 70 மூடைகள் வெல்லம் உற்பத்தி செய்தாலும், செலவுகள் போக ரூ. 20 ஆயிரம் மட்டுமே மிஞ்சுவதாகத் தெரிவித்தார். ஒரு மூடை வெல்லம் குறைந்தது ரூ. 2,500-க்கு விற்பனையானால் மட்டுமே விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும். எனவே, கரும்பு விவசாயிகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கவும், தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பிற்குத் தேவையான வெல்லத்தை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளிடம் இருந்தே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.














