தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (SLPP) கட்சியின் தலைவருமான நாமல் ராஜபக்ஷே அரசியல் சார்ந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, அரசியலில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தற்போது அவர் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அவரது அரசியல் அணுகுமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கரூரில் 41 உயிர்கள் பறிபோன சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக மற்றும் விஜய் மீதான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. மேலும், சமூக ஊடக அரசியலைவிட நேரடி மக்களிடையே களப்பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில், இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நாமல் ராஜபக்ஷே விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், “விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். அவரது திரைப்படப் பயணத்தை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். ஆனால், அரசியல்வாதியாக அவர் இன்னும் முழுமையாக முதிர்ச்சி அடைய வேண்டிய நிலை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “விஜய் அரசியலில் நுழைந்தது எல்லைகளைத் தாண்டிய கவனத்தை பெற்றுள்ளது. இருப்பினும், அந்த கவனம் நீடிப்பதா என்பது அவரது செயல்பாடுகளைப் பொறுத்தது. அவரது அரசியல் வருகை தமிழக அரசியலுக்கு புதிய பரிமாணத்தை வழங்கலாம். ஆனால், பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் சினிமா கதைகளைவிட மிகவும் சிக்கலானவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அரசியல் என்பது ஒரு ஸ்கிரிப்ட் அல்ல. அது முழுநேர அர்ப்பணிப்பை எதிர்பார்க்கும் துறை. மக்களின் எதிர்பார்ப்புகளை உண்மையான நடவடிக்கைகளின் மூலம் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். வாக்குறுதிகள் பேசுவதில் அல்ல, செயல்படுத்துவதில்தான் அரசியலின் உண்மை இருக்கிறது. நிஜ வாழ்க்கை பிரச்னைகள் திரையில் காண்பிப்பதைவிட பல மடங்கு உணர்திறன் கொண்டவை” என நாமல் ராஜபக்ஷே தனது கருத்தைத் தெரிவித்தார்.

















