நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி மற்றும் அதிபர் ராம் சந்திர பவுடல் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து நேபாள ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது.
சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, ஊழல், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இளைஞர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் ராஜினாமா செய்தனர்.
இன்று காத்மாண்டுவில் நடந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கு எதிராக கற்களை வீசி தாக்கினர். நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம், அமைச்சர் பிரித்வி சுபா குருங்கின் வீடு உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் பிரசண்டாவின் வீட்டிலும் தாக்குதல் நடைபெற்றது.
மேலும், நேபாள பிரதமர் சர்மா ஒலியின் வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அது முற்றிலும் எரிந்தது. இந்நிலையில், சர்மா ஒலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அதிபர் ராம் சந்திர பவுடலும் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில், நேபாள நிதி அமைச்சரை பொதுமக்கள் துரத்தி தாக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. கடும் பரபரப்பைச் சூழ, நேபாளத்தில் தற்போது ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
