திருநெல்வேலி : பா.ம.க.வில் நிலவும் உட்கட்சி பிரச்னையில் பா.ஜ.க. எந்த வகையிலும் ஈடுபட்டதில்லை என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, அவர் கூறியதாவது:
“ராணிப்பேட்டையில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், மற்றொரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சரிவர செயல்படவில்லையென்பதை நிரூபிக்கின்றன. போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் ‘நாங்கள்தான் உண்மையான ஆட்சி செய்கிறோம்’ என மார்தட்டிக் கொண்டு பேசுகிறார். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது,” என்றார்.
அத்துடன், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இரண்டு குட்டி யானைகளை நெல்லையப்பர் கோவிலுக்கு வழங்கும் திட்டம் இருப்பதாகவும், அந்த நடவடிக்கை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
பா.ம.க.வில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையிலான மோதலுக்குப் பின்னால் பா.ஜ.க.வின் பங்கிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
“இது முழுக்க முழுக்க பா.ம.க.வின் உட்கட்சி பிரச்னை. அதில் பா.ஜ.க.விற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. எந்த பின்னணியும் இல்லை. எங்களால் அதைப்பற்றி கருத்து கூற முடியாது. பிற கட்சிகளின் உட்கட்சி பிரச்சனைகளில் தலையிடுவது நாங்கள் செய்யக்கூடியதும் அல்ல, செய்வதற்குரியதுமானதும் அல்ல,” எனத் தெரிவித்தார்.
அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் யார் என்ற கேள்விக்கு, “அதை இ.பி.எஸ்.யிடம் தான் கேட்க வேண்டும்,” என்று பதில் அளித்தார்.