மயிலாடுதுறை அருகே பாண்டூரில் சிதிலமடைந்த வீடுகளில் தவிக்கும் மக்கள் , இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு :-
மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட சமுதாய மக்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவும் அரசு சலுகைகள் மூலம் வீடுகள் கட்டித்தரவும் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.மயிலாடுதுறை அருகே உள்ள பாண்டூர் நடுத்தெருவில் சுமார் 60 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இதில் 10 குடும்பங்கள் சொந்த வீட்டுமனைப் பட்டா இல்லாத காரணத்தால் சொந்தமாக வீடு கட்ட முடியாமல் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள வீடுகள் மிகவும் சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் , இதனால் மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் ஒழுகி, குழந்தைகளுடன் நனைந்தபடியே கடும் அவதிக்குள்ளாகி வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், தாங்கள் குடியிருக்கும் இடம் கிராமக் கணக்கில் விடுபட்டுள்ளதாகத் தெரிவதால், தமிழக அரசின் வீடு கட்டும் சலுகைகளைப் பெற இயலாமல் தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இந்த இடத்தை உடனடியாக நேரில் ஆய்வு செய்து, தாங்கள் வசிக்கும் இடத்தை கிராமக் கணக்கில் இணைப்பதோடு, அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, அரசு நிதியுதவியுடன் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பாகக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.













