கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான அளவு மணல் குவாரிகளை திறந்து, மணல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் அரசு பிரதிநிதிகள் இடம்பெறும் நிரந்தர விலை நிர்ணயக் குழுவை அரசு அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் மாநிலத் தலைவர் பொ.பொன்குமார் பேட்டி.
விழுப்புரம் தனியார் மஹாலில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நலச்சங்கம் மற்றும் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பொ.பொன்குமார் தலைமை தாங்கினார். கௌரவ ஆலோசகத் தலைவர் சி.மோகன்ராஜ், மாவட்டத் தலைவர் பி.அண்ணாதுரை, செயலாளர்கள், பொருளாளர்கள், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நில வணிகக் கூட்டமைப்பின் சங்க அமைப்பில் 450-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் நலவாரிய தொழிலாளர்கள் இந்த அமைப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் பொ.பொன்குமார் பேட்டியில்
கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள், அமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான அளவு மணல் குவாரிகளை திறந்து, மணல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் அரசு பிரதிநிதிகள் இடம்பெறும் நிரந்தர விலை நிர்ணயக் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை விலையை நிர்ணயிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பத்திரப் பதிவுகள் வெளிப்படைத்தன்மையுடனும் ஊழல் இல்லாமலும் நடைபெறுவதற்காக ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ள அரசுக்கு பாராட்டு தெரிவித்த அவர், தற்போது நடைமுறையில் உள்ள கருவிழி மற்றும் கைரேகை பதிவு உள்ளிட்ட நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஒருவரிடம் 80 சென்ட் நிலம் இருந்தால் அதில் 20 சென்ட்டை மட்டும் விற்பனை செய்ய முடியாத நிலை போன்ற ரியல் எஸ்டேட் துறையில் உள்ள தடைகளை நீக்கி, சொந்த நிலத்தை உரிமையாளர் தனது தேவைக்கேற்ப விற்பனை செய்யும் வகையில் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் பத்திர எழுத்தாளர்கள் மற்றும் பத்திரப் பதிவாளர்களைப் போல அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்காக தனியாக நல நிதியம் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பத்திர எழுத்தாளர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து கூடுதலாக ₹10 நலநிதியாக வசூலித்து, ரியல் எஸ்டேட் தொழிலாளர்களின் நலனுக்குப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொ.பொன்குமார் தெரிவித்தார்.













