தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. “2025 இலவச லேப்டாப் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன” என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பு பல தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும், தனிப்பட்ட முறையில் மடிக்கணினி வாங்க முடியாத நபர்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதாகவும், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே லேப்டாப் பெற்றுவிட்டனர் என்ற தகவல்களும் இடம்பெற்றிருந்தன. மேலும் காலக்கெடு: 22.11.2025 என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தகவலின் உண்மை குறித்து எழுந்த சந்தேகத்துக்கு தெளிவுறுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், இணையத்தில் பரவி வரும் இத்தகவல் முற்றிலும் தவறானது என்றும், தமிழ்நாடு அரசு எந்தவிதமான ஆன்லைன் விண்ணப்பத்தையும் தற்போது திறக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்வகையான போலி இணையதளங்கள் மற்றும் தவறான பதிவுகள் மூலம் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை நம்பாமல், அரசின் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் மற்றும் அறிவிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தகவல் சரிபார்ப்பகம் வலியுறுத்தியுள்ளது.
















