சென்னை : நடிகர் ரவி மோகன் வாங்கிய சொகுசு பங்களா கடன் தவணை 10 மாதங்களாக செலுத்தப்படாததால், அந்த வீட்டை ஜப்தி செய்ய வங்கி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சென்னை ஈசிஆர், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த சொகுசு பங்களா, தனியார் வங்கியில் இருந்து கடன் பெற்று வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 10 மாதங்களாக இஎம்ஐ கட்டணம் செலுத்தப்படவில்லை என்று வங்கி தரப்பில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சொத்தை ஜப்தி செய்ய எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அதை பெற்றுக்கொள்ள நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொரியர் ஊழியர் நோட்டீஸ் வழங்கச் சென்றபோது, ரவி மோகன் வாங்க மறுத்ததாகவும், “வங்கியில் நேரடியாகப் பெற்றுக்கொள்கிறோம்” என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, அந்த பங்களாவில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி வசித்து வருகிறார்.
இதேவேளை, ‘பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில், படத்தில் நடிக்க வழங்கப்பட்ட 6 கோடி ரூபாய் முன்பணத்தை திருப்பித் தர வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், ரூ.5 கோடியே 90 லட்சம் மதிப்பிலான சொத்து உத்தரவாதத்தை ஆகஸ்ட் 20க்குள் தாக்கல் செய்யுமாறு நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டது.
ஆனால், அவர் அந்த உத்தரவாதத்தை தாக்கல் செய்யாத நிலையில், சொத்துக்களை முடக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கிடையில், வங்கி நோட்டீஸை ஏற்க மறுத்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















