தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ‘குபேரா’ திரைப்படம், தற்போது ஜப்பானிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, தெலுங்கு நடிகர் அகினேனி நாகார்ஜுனாவுக்கு அந்நாட்டு ரசிகர்கள் ‘நாக்-சமா’ என அழைக்கின்றனர்.
தனுஷ் கதாநாயகனாகவும், ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘குபேரா’ திரைப்படத்தை இயக்கியவர் சேகர் கமுலா. தேவீ ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியாகி, முதல் ஐந்து நாள்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.
படத்தில் தனுஷ் ஒரு பிச்சைக்காரனாகவும், நாகார்ஜுனா “தீபக்” என்ற பணக்காரராகவும் நடித்துள்ளனர். கருப்பு பணத்தை வெள்ளை செய்யும் முயற்சியில் பிச்சைக்காரர்களின் கணக்கை பயன்படுத்தும் தீமையான முயற்சியும், அதன் பின்னணியில் மனித உணர்வுகள் புலப்படும் கதைவிதையுமே படம் முழுக்க தொடர்கிறது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடந்த விழாவில் நடிகர் சிரஞ்சீவி, தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் நடிப்பை பாராட்டினார். அதேவேளை, நாகார்ஜுனாவின் கதாபாத்திரம் ஜப்பானிய ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றுள்ளது.
ஜப்பானில் சினிமா ரசிகர்கள் நாகார்ஜுனாவை ‘நாக்-சமா’ என அன்புடன் அழைக்கத் தொடங்கியுள்ளனர். “சமா” என்பது ஜப்பானியர்களிடையே கடவுள்கள் அல்லது மிக உயர்ந்த மதிப்புடைய நபர்களுக்கே வழங்கப்படும் மரியாதைச் சொல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரைப் போலவே, தற்போது நாகார்ஜுனாவும் ஜப்பானில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறார்.