நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பெயர் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்
இப்படத்தில், ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜா இசையமைத்த ‘ராத்திரி சிவ ராத்திரி’ பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இசையமைப்பாளர் இளையராஜா, தன்னுடைய அனுமதியில்லாமல் பாடலை பயன்படுத்தி இருப்பதாகவும், இது காப்புரிமை மீறியதாகவும் கூறி சிவில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணையின் போது, இளையராஜாவின் பாடலும், அவரது பெயரும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையில், தயாரிப்பாளர் வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர், பாடலுக்கான உரிமையை சோனி மியூசிக் நிறுவனத்திலிருந்து பெற்றுள்ளதாகவும், தற்போது படத்தில் இருந்து இளையராஜாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.