சீர்காழி அருகே புத்தூரில் நடைபெற்ற புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிட திறப்பு விழா
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் வாடகைக் கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. ஆரம்ப காலகட்டத்திலிருந்து வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இக் கட்டிடத்திற்கு பதிலாக அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி அதில் அலுவலகத்தை இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. கோரிக்கையை ஏற்று கடந்த 2023 ஆம் ஆண்டு, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் போதிய இடம் கிடைக்காததால், புத்தூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மண்டல துணை பதிவுத்துறை தலைவர் செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து குத்து விளக்கேற்றி பத்திர பதிவை துவக்கி வைத்தார். கூடுதல் பொறுப்பு உதவி பதிவுத்துறை தலைவர் மணிகண்டன், சார் பதிவாளர்கள் ஆசைதம்பி, தமிழரசன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

















