வேலூரில் ஆட்டோவில் குட்கா கடத்திய வாலிபர் கைது. 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுவதாக விருதம்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் விருதம்பட்டு காவல் நிலைய போலீசார் சேனூர் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர்.அதில் ஆந்திர மாநிலம் சித்தூர் மார்க்கெட் பகுதியில் இருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட சுமார் 30 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் வேலூர் முத்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (26) என்பதும் இவர் தனது நண்பரின் ஆட்டோவை வாங்கி வந்து இக்கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ராஜ்குமாரை கையும் களவுமாக கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

















