சென்னை: நடிகை ஆண்ட்ரியா, மலையாளத் திரையுலகில் கதாபாத்திர எழுதும் தரம் தமிழ் சினிமாவை விட உயர்ந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கவின்–ஆண்ட்ரியா இணைந்து நடித்த மாஸ்க் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை கூறினார்.
மாஸ்க் படத்தைத் தானே தயாரித்துள்ள ஆண்ட்ரியா, “இந்தப் படம் நல்ல வசூல் பெற்றால், பிசாசு 2 படத்தை வெளியிட தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்” என்று தெரிவித்தார்.
திரைப்படங்களில் “கேரக்டர் ஆர்டிஸ்ட்” என்ற சொல்லுக்கு பதிலாக “சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்” என்று குறிப்பிடப்படவேண்டும் என்றும், இதை ஹாலிவுட் மற்றும் மலையாளத் திரையுலகின் நடைமுறைகளுடன் ஒப்பிட்டு பேசினார். “ஒரு முன்னணி மலையாள நடிகர், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கலாம்; அடுத்த படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திலும் நடிப்பார். அங்குள்ள திரையுலகில் இதுபோன்ற பண்புகள் சாதாரணம்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், “மலையாளத்தில் என்னை மிகவும் கவர்வது கதைகளின் தரம். அங்கே கதாபாத்திரங்களை உண்மையாக மதித்து எழுதுகிறார்கள். எனக்கு மொழி தெரிந்திருந்தால் நான் அங்கேயே செட்டில் ஆனிருப்பேன். ரூ.4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு படமும் ரூ.100 கோடி வசூல் எடுக்கும். இப்படிப்பட்ட விஷயம் வேறு எந்த தயாரிப்புத் துறையிலும் அரிது” என ஆண்ட்ரியா தெளிவுபடுத்தினார்.
ஆண்ட்ரியாவின் இந்த கருத்துக்கள், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.
















