சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் பேரில், மாநில மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது.
‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானவர். இவரது கேட்டரிங் சேவை பல்வேறு விஐபிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரங்கராஜ் மனைவி ஸ்ருதி; தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். 2023-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், கருவுற்ற நிலையில் ரங்கராஜ் தன்னை விலக்கிக் கொண்டதாகவும், பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
அவரது புகாரின் பேரில் மாநில மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இரண்டு முறை நேரில் விசாரணை நடைபெற்றது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார்.
இந்நிலையில், விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கும் மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
இதனுடன், ஜாய் கிரிசில்டா சமீபத்தில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய மருத்துவச் செலவு, வீட்டு வாடகை மற்றும் பிற தேவைகளுக்காக மாதம் ரூ.6.5 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இதற்கிடையில், ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் “ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ். அப்பாவின் முகத்தையே உரித்து வைத்துள்ளார்” என பதிவிட்டு, குழந்தையின் கை விரல் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தற்போது காவல்துறையும் மகளிர் ஆணையமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
















